சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
சிதம்பரம்,
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய 2 திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவையாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று காலை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து நாளை சந்திர பிரபை வாகன வீதி உலா, நாளை மறுநாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 29-ந் தேதி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ந் தேதி யானை வாகன வீதி உலாவும், 31-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.
அதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.






