

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 53வது திருத்தலமாகவும், நம்மாழ்வாரால் பாடப்பட்ட நவதிருப்பதி தலங்களில் 7வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்ற ஶ்ரீ மகர நெடுங்குழைக்காதர் கோவில் அமைந்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் மீன் வடிவ காதணி அணிந்த மூலவர் ஶ்ரீ மகர நெடுங்குழைக்காதர், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியார், நிகரில் முகில் வண்ணன் என்ற திருநாமத்துடன் உற்சவர் சேவை சாதிக்கிறார்கள். இக்கோவிலில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பங்குனி பெருந்திருவிழா நடைபெறுகிறது.
பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கால் நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நித்திய கால பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, தீபாராதனையுடன் காலை 7.40 மணி முதல் 8.15 மணிக்குள் கால் நாட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கால் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து தென்திருப்பேரை சுற்று வட்டார 15 கிராம உழவர்களுக்கும் மரியாதை செய்து கோவிலுக்கு அழைத்து வந்தனர்.