திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

விழாவில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேரில், காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

தொடர்ந்து, காலை 7.30 மணியளவில், திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். தேரடியிலிருந்து புறப்பட்ட தேர், குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக காலை 9.45 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

இதில், திருவள்ளூர், திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு, 'கோவிந்தா... கோவிந்தா..' என்று பக்தி முழக்கமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரை பின் தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 7 மணிக்கு உற்சவர்கள் தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வரும் 30-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மே-1ந் தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com