திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

தேரோட்ட நிகழ்வில் திருவள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், வருடத்திற்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தினமும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேர் வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருத்தேரில் காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து, காலை 7.30 மணியளவில், தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேர் தேரடியிலிருந்து புறப்பட்டு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக காலை 9.30 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இந்நிகழ்வில், திருவள்ளூர், சென்னை, திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பலர் திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டும் வணங்கினர்.
தேரோட்டம் முடிவடைந்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு தேரிலிருந்து சுவாமி எழுந்தருளி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு தேரிலிருந்து கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.






