திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்

திருமழிசை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமழிசையில் நடைபெற்ற தேரோட்டம்
Published on

திருமழிசை,

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகல மாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா

பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் ஜெகந்நாத பெருமாள் மற்றும் பக்திசாரர் எனும் திருமழிசை ஆழ்வார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 25-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினந்தோறும் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் ஏழாம் நாளான நேற்று காலை சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஊர்வலம் மேற்கு மாட வீதியை அடைந்தபோது, சாலை வளைவில் தேர் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் பலகைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக முயற்சி செய்து தேரை பாதுகாப்பாக திருப்பினர். பின்னர் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் திருமழிசை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com