

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோவிலின் உப கோவிலான அறம்வளர்த்த பெரிய நாயகி என்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, பெண்கள் மதுக்குடம் எடுத்தல், கோவில் பூசாரி தீச்சட்டி ஏந்தி வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று காலை விரதம் மேற்கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை அடைந்தனர். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.