திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 29-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
சித்திரை திருவிழா கொடியேற்றம்
Published on

திருவையாறு,

தஞ்சையை அடுத்த திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை விழா நடக்கிறது.

முதல் நாளான நேற்று காலை சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. விழாவில் திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்துகொண்டு ஐயாறப்பரை வழிப்பட்டனர். 25-ந் தேதி (சனிக்கிழமை) மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

தேரோட்டம்

29-ந் தேதி(புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறின் 4 வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர் 4 வீதிகளில் வந்து நிலையை அடைந்ததும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

மே 2-ந் தேதி (சனிக்கிழமை) முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம். திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றங்கரையில் வாணவேடிக்கை நடைபெறுகிறது. 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com