

திருவள்ளூர்,
திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 28ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மே 1ம் தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.