தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று மாலை சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சங்கர ராமேஸ்வரரும், எழில் கொஞ்சும் கிளி வாகனத்தில் பாகம்பிரியாள் அம்பாளும் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்க, தீவட்டி மரியாதையுடன் சுவாமி - அம்பாள் 4 ரத வீதிகளிலும் பவனி வந்தனர்.

ரத வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக சுவாமிக்குத் தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். குறிப்பாக கிளி வாகனத்தில் எழுந்தருளிய அம்பாளைக் காண பெண் பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஏப்ரல் 30, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com