

மனித வாழ்வில் பணிகளை திறம்பட செய்து முடிக்க கடுமையான முயற்சி செய்து வருகிறோம். அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒவ்வொருவரின் திறமையும் மற்றவர்களின் திறமையில் இருந்து நிச்சயம் மாறுபடும். முயற்சியில் வெற்றி அல்லது தோல்வி என்பது அவரவர் விதிப்படி தான் நடக்கும் என்றாலும் சுய தூண்டுதலால் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
ஒரு சிலர் தங்களின் வெற்றியின் சாதக, பாதகத்தை உள்ளுணர்வின் மூலம் துல்லியமாக கணித்து விடுவார்கள். ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை கணித்து உணர்த்துவது ஜோதிடம் என்றால் அந்த நன்மைகளை சாதகமாக்கவும் தீமைகளை தகர்க்கவும் உள்ளுணர்வு மிக மிக அவசியம்.
உடலும், ஆன்மாவும் இணைந்து செயல்படுவதே உள்ளுணர்வு. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது. உடல் என்பது பிறந்த ராசி. ஒருவர் பிறந்த ராசிக்கு ஏற்பவும் ராசியில் உச்சம், நீச்சம் பெறும் கிரகத்தின் தன்மைக்கு ஏற்பவும் ஆழ் மனதில், சிந்தனையில், உள்ளுணர்வில் மாறுபாடு இருக்கும். ஆழ் மனதில் நல்ல சிந்தனை இருந்தால் உடலும் ஆன்மாவும் இணையும். தீய சிந்தனை இருந்தால் உடலோடு ஆன்மா இணையாது. ஒருவர் எதை நினைக்கின்றாரோ அந்த இடத்திற்கு அவரது ஆன்மா செல்லும்.
உதாரணமாக இறைவனை நினைக்கும் போது உடலும் ஆன்மாவும் இணைந்து சூட்சும சக்தி பெற்று இறைவனிடம் சென்று உள்ளுணர்வு சிறப்பாக இயங்கும். நாம் தீய செயல்களை நினைக்கும்போது சூட்சும சக்தி அசுப வலிமை பெற்று எண்ணச்சிதறலால் உள்ளுணர்விற்கு வலிமை குறையும். ஒரு மனிதன் சமநிலையில் இருக்கும் போது மட்டுமே உள்ளுணர்வு சீராக இருக்கும். உச்சம் பெற்ற கிரகத்தின் ஆதிக்கத்தால் மிகுதியாகும் உள்ளுணர்வு நீச்சம் பெறும் கிரகத்தால் வலிமை இழக்கும்.