

ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதியாக திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் மாடவீதி புறப்பாடு, மாலையில் வாகன சேவை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. 7 மணிக்கு நித்தியல், 9.45 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம்இடர்கடிவான் இருவரும் எழுந்தருளினார்கள். தொடர்ந்து 10.15 மணிக்கு திருப்புளிங்குடி உற்சவர் காய்சின வேந்தப் பெருமாள் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடைபெற்றது.
11.30 மணிக்கு மூன்று பெருமாள்களுக்கும் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பின்னர் அத்யாபகர்கள் சீனிவாசன், ஸ்ரீகிருஷ்ணன், பட்சி ராஜன், திருவேங்கடத்தான், வீரராகவன், அனந்த வெங்கடேசன், சேஷகிரி, வரதசடகோபன், மதுரகவி, பாலாஜி, அனந்த ஆழ்வார், கிருண்ணன் ஆகியோர் சேவித்தனர். சாத்து முறை கோஷ்டி தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இரவில் மூன்று கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது. 7.30 மணிக்கு மூன்று பெருமாள்களும் வாகன மண்டபம் எழுந்தருளினர். கருட வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு 9.20 மணிக்கு உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். குடவருவாயில் வெளியே மூவரும் ஒரே இடத்தில் காட்சி அளித்து மாடவீதி மற்றும் ரதவீதியை சுற்றி வந்து அருள்பாலித்தனர்.
பின்னர் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம்இடர்கடிவான் தங்கள் ஸ்தலங்கள் சென்று சேர்ந்னர்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், சௌந்தர்ராஜன், கோபாலகிருஷ்ணன், காசி, ஸ்ரீவைகுண்டம் ரமேஸ், வாசு, சீனு, நத்தம், கண்ணன், ரகு, ராஜகோபாலன், முத்துராமன், ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நிஷாந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.