திருச்சானூரில் வருடாந்திர வசந்தோற்சவம்- தேதி அறிவிப்பு

திருச்சானூர் கோவிலில் வசந்தோற்சவத்தை முன்னிட்டு மே 6-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் மே மாதம் 11 முதல் 13-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக மே 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது. மே 12-ந்தேதி காலை 9.45 மணிக்கு கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேர் வலம் வருகிறது.
வசந்தோற்சவ விழாவையொட்டி 3 நாட்களுக்கு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுக்கிரவார தோட்டத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வசந்தோற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ.150 செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு டிக்கெட்டில் இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு மே 6-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருள செய்து கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய தூய்மைப்பணி நடக்கிறது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், கூரை, பூஜை பொருட்கள் மற்றும் அனைத்துப் பொருட்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ததும், நாமகொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சகு, கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலி கட்டா போன்ற நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படுகிறது. தூய்மைப்பணி முடிந்ததும் காலை 9 மணியில் இருந்து பக்தர்கள் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த உற்சவங்கள் காரணமாக, மே 6 மற்றும் மே 10 முதல் 13-ந்தேதி வரையிலான கல்யாணோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.






