திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: 3-வது நாளாக யாகசாலை பூஜை- திரளான பக்தர்கள் பங்கேற்பு

இன்று காலையில் திரவிய பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரியமாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் காலை மற்றும் மாலையில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு யாகசாலை பூஜை தொடங்கி, முதல் கால பூஜை நடைபெற்றது.
2-வது நாளான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதருக்கு 5, நடராஜருக்கு 5 மற்றும் பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு 12 என மொத்தம் 71 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் கும்பத்திற்கு பூர்ணாஹுதியாகி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை, 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மூன்றாவது நாளான இன்றும் யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இன்று காலையில் நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலையில் கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 11 மணியளவில் திரவிய பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் ஐந்தாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதேபோல், சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையின் அருகே சுவாமி பெருமாளுக்கு 5 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமாளுக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, கும்பாபிஷேகம் வரை காலை, மாலை என 4 கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன.
விழாவை முன்னிட்டு கோவில் சண்முக விலாசம் மண்டபம் முன்பகுதியிலும், உள்பகுதியிலும் வண்ண மலர்களாலும், பல்வேறு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரலையில் பக்தர்கள் பார்க்கும் வகையில் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.






