

திருமலையில் அடர்ந்த சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ராமகிருஷ்ண தீர்த்தமும் ஒன்று. அங்கு ஆண்டு தோறும் தெலுங்கு மக மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று முக்கொடி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி தெலுங்கு மக மாத பவுர்ணமியான நேற்று ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி உற்சவம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்களும், ஊழியர்களும் வேத மந்திரங்களை உச்சரித்தவாறே கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காலை 11 மணியளவில் ராமகிருஷ்ண தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு, ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீகிருஷ்ணர் சிலைகளுக்கு பால், தயிர், சந்தன கலவை மற்றும் பிற நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து முக்கொடி உற்சவத்தை நடத்தினர்.
அடர்ந்த சேஷாசலம் வனப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரையாக ராமகிருஷ்ண தீர்த்தத்துக்கு சென்று புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ராமகிருஷ்ண தீர்த்தத்துக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு பாபவினாசனம் அணை பகுதியில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பொங்கல், உப்மா, சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை பொட்டலங்கள், குடிநீர் மற்றும் மோர் பொட்டலங்களை வினியோகித்தனர்.
தேவஸ்தான மருத்துவத்துறை சார்பில் அந்த இடத்தில் ஒரு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக பொறியியல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் மலைப்பாதையில் பல இடங்களில் நடைபாதைகளை அமைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்த நிலையில், இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி உற்சவத்தில் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர்.
பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.