

திருப்பதி,
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் காலையிலும் மாலையிலும் வாகன சேவை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். வாகன சேவையின்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். சிலர் கடவுள்கள் போன்று வேடமணிந்து வந்து பக்தர்களை பரவசமடையச் செய்தனர். வீதி உலாவின்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி பகவானை தரிசனம் செய்தனர்.
காலையில், வேத மந்திரங்கள் முழங்க, பால், தயிர், தேன், சந்தனக் கலவை மற்றும் நறுமணப் பொருட்களுடன் ஸ்நாபன திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சர்வபூபால வாகன சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
இன்றைய நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அதிகாரிகள், கோவில் சேவகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.