திருப்பதியில் ஏப்ரல் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள், தங்கும் அறைகள் வெளியீடு

ஏப்ரல் மாதம் சாமி தரிசனத்துக்கான பல்வேறு டோக்கன்கள், தங்கும் அறைகள் ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
திருமலை,
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஏப்ரல் மாதம் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் அறைகள் ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க அறைகள் ஒதுக்கீடு விவரங்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது.
ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற அர்ஜித சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்தச் சேவைகளுக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவு (குலுக்கல்) 21-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் செய்யலாம். டிப்பில் தேர்வான பக்தர்கள் 21 முதல் 23-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தினால், தரிசன டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும்.
ரூ.300 டிக்கெட்
22-ந்தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஸ்ரீவாரி சாலகட்டல வசந்தோற்சவம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
மெய்நிகர் சேவைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தரிசன டிக்கெட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சணை டோக்கன்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டோக்கன்கள் ஆகியவைகளும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்ட காலம் நோயால் அவதிப்படும் பக்தர்கள் ஆகியோருக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களும் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். 24-ந்தேதி காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
அறைகள் ஒதுக்கீடு
திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க 24-ந்தேதி மாலை 3 மணிக்கு அறைகள் ஒதுக்கீ செய்யப்படும். 27-ந்தேதி ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களுக்கான தரிசன ஒதுக்கீடு நடக்கிறது.
மார்ச் மாதத்துக்கான ஸ்ரீவாரி சேவை மற்றும் பரகாமணி சேவை கோட்டா ஒதுக்கீடு 27-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






