

திருவண்ணாமலை,
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த 1-ந் தேதி பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர் அன்று இரவு கோவில் கொடிமரம் முன்பு அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 2-ந் தேதி இரவு கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி நிகழ்ச்சி நடந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 3 நாட்கள் நலங்கு உற்சவம், திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.
அதைதொடர்ந்து விழா நிறைவாக நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் சிறப்பு அலங்கரத்தில் கோவிலில் எழுந்தருளி பின்னர் அங்கிருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று தாமரை குளத்தில் எழுந்தருளினர். பின்னர் திருக்கல்யாணத்தின்போது வைக்கப்பட்ட முளைத்த நவதானியங்களை குளக்கரையில் புனித நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர்.
தொடர்ந்து தாமரை குளம் ராஜா மண்டபத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் அங்கிருந்து கோவிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து குமரக்கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.