

திருச்சி,
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் ஜெ.ஜெ.நகர் மேல் சமயபுரம் மகாமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி கரகம் பாலித்து நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குறிப்பாக, சில பக்தர்கள் குழந்தைகளைத் தலையில் சுமந்தபடி பூக்குழி இறங்கியது மெய்சிலிர்க்க வைத்தது. பின்பு மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கை மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுற்றது.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி குண்டக்கல் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டிய பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
20-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடனாக குழந்தைகளை முதுகில் தூக்கியபடியும், பால்குடம் எடுத்தபடியும் தீ மிதித்தனர். 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் பால்குடம் சுமந்தபடியும், காவடி எடுத்தபடியும் தீமிதித்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.