

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே முடிகண்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக கடந்த 19-ந் தேதி நள்ளிரவு 12 மணியளவில் கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து அம்மன் ரதத்தில் புறப்பாடாகி வீதி உலா நடந்தது. தொடர்ந்து கிடாவெட்டு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடை பெற்றது.
நேற்று முன்தினம் இரவு பிடாரியம்மன் புஷ்ப தேர் வீதி உலா நடைபெற்றது. நேற்று மாலை கோவிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் மந்தையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது ஒவ்வொரு வீட்டின் முன்பும் பொதுமக்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பூந்தேருக்கு பின்னால் வந்த இளைஞர்கள், பெண்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றியும், வண்ண பொடிகளை தூவியும் மஞ்சள் நீராடினர். இதைத்தொடர்ந்து சுவாமியின் பூந்தேர் மந்தை கோவிலை சுற்றி வந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்துடன் சாமி இருப்பு கோவிலுக்கு மேளதாளம் முழங்க சென்றது. விழாவில் முடிகண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.