வைகாசி மாத பிறப்பு... சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கோ பூஜை

கோபூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கினர்.
வைகாசி மாத பிறப்பு... சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கோ பூஜை
Published on

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு வைகாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. மாசிலாமணி நிலையத்தில் நடந்த கோபூஜையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபாடு செய்தார்.

பின்னர் கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கினர்.

இதேபோல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த நாயகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவாரத் திருப்பதிகங்கள் பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com