

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும் திருப்புகழ் பாடப்பெற்றதுமாகிய இக்கோவில் கல்யாண பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். கடைசியாக 2019ம் ஆண்டு வைகாசி பிரம்மோத்சவ விழா நடைபெற்றது. இதையடுத்து, கொரோனா தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளால் 7 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, ஆண்டுதோறும் கோவிலில் நடத்தப்படும் முக்கிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 7 ஆண்டுகளுக்கு பின், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
கொடியேற்றம் முடிந்து சவுடால் உற்சவம் நடைபெற்றது. மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலையில் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.