வைகாசி விசாக திருவிழா.. வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா

வாகன பவனியின்போது 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா, வாகன பவனி
இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் பவனி
Published on

கன்னியாகுமரி,

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளி இமயகிரி வாகனம்

7-ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து இரவு 7மணிக்கு பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு 10 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஊர்வலத்துக்கு முன்னால் பொம்மலாட்டம், வேடம் அணிந்த நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி, செண்டை மேளம், சிங்காரி மேளம், கேரள கதகளி ஆட்டம்,கேரளாவைச் சேர்ந்த கலைஞர்கள் அகோரியாக வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்ச்சி, பெண்களின் நாதஸ்வர கச்சேரி, பூக்காவடி ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. 100-க்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பக்தர்கள் தரிசனம்

கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறினார். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

அலங்கார தீபாராதனை

8-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது.

மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது. அதன் பின்னர் 8.30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம் (30-ந்தேதி) வரை திருவிழா நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com