

சென்னை,
வைகாசி மாத பவுர்ணமி தினம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாள் வைகாசி விசாக திருவிழாவாக முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கக் கூடிய பலன், வைகாசி விசாகத் திருநாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா உலகெங்கிலும் வாழும் தமிழக மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர்
இதையொட்டி முருகன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி போன்ற காவடிகளை எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவில்
திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் வந்து மூலவரை தரிசித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பொது வழியில் மூலவரை தரிசிக்க சில மணி நேரம் காத்திருக்கின்றனர்.
பழனி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று ஏரளாமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் கோவில் படிப்பாதை. யானைப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.அதேபோல் பொது தரிசன பாதை, கட்டண தரிசன வழியிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று 4.30 மணிக்கு தேரோட்டமும், இரவு 7.30 மணிக்கு பெரிய தந் தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற் கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சண்முகர் சன்னதியில உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.
5.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு காலை முதல் மதியம் வரை பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பாலால் முருகப்பெருமனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால் குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அபிஷேகம் செய்தனர்.
சிக்கல் சிங்கார வேலவர் கோவில்
இதேபோல் சென்னை வட பழனி முருகன் கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்போரூர் முருகன் கோவிலிலும் வைகாசி விசாக சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கார வேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.