வைகுண்ட ஏகாதசி விழா.. திருப்பதியில் நாளை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்


வைகுண்ட ஏகாதசி விழா.. திருப்பதியில் நாளை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
x

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படும்.

பெருமாளை வழிபடுவதற்கு உகந்த ஏகாதசி தினம் மாதந்தோறும் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழியில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் ‘சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வகையில் திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. எப்போதுமே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் பிரம்மோற்சவம் மற்றும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு சிறப்பு நிகழ்வுகளுக்கு பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். நடப்பாண்டில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படுவது வழக்கம். இந்த பத்து நாட்களிலுமே பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நாளை நடைபெறுகிறது. ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை உள்ள சன்னதிகள், பிரசாத அறை, சுவர்கள், மேல்சுவர் உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு பரிமள நீர் தெளிக்கப்படும். இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை அர்ச்சகர்களால் ஆகம முறைபடி நடத்தப்படும். அதபின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், டிசம்பர் 23-ம் தேதி அன்று உயர் பொறுப்புகளில் தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கான விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, தங்கள் தரிசனத்தை தேர்வு செய்து தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்கிழமையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

1 More update

Next Story