மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி உற்சவம்

குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வேப்பிலை மாரியம்மன், ராஜவீதிகளின் வழியாக கோவில்பட்டி சாலையை கடந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.
குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி
குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வேப்பிலை மாரியம்மன் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும், கோவிலில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க பக்தர்களின் கோஷத்துடன் வேடபரி புறப்பட் டது. ராஜவீதிகளின் வழியாக ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் கோவில்பட்டி சாலையை கடந்து அம்மன் மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.

முன்னதாக மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் தாரை, தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் முளைப்பாரி எடுத்து வந்தனர். நேற்று அதிகாலையில் இருந்து மதியம் வரை வேப்பிலை மாரியம்மன் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். காளியம்மன் கோவில். காட்டு முனியப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தி பரவசத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர்.

நாளை (புதன்கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com