சிந்துப்பட்டி பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம்... காரணம் என்ன தெரியுமா?


சிந்துப்பட்டி பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம்... காரணம் என்ன தெரியுமா?
x

திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், அங்கு செல்ல முடியாதபட்சத்தில், சிந்துப்பட்டி கோவிலில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

மதுரை

மதுரை மாவட்டம் சிந்துப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது வேங்கடேச பெருமாள் கோவில். மிகவும் பழமையான இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீ வேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கை. இக்கோவில், திருப்பதி கோவில் அமைப்புடன் விளங்கினாலும் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி என உபயநாச்சியாரோடு காட்சி தருகிறார். இக்கோவிலில் துளசியும், தீர்த்தமும் பிரசாதமாக கொடுப்பதோடு விபூதியும் பிரசாதமாக தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுல்தான்கள் வசமானது. அப்பகுதி மக்கள் சுல்தான்களால், பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவோடு இரவாக நாட்டை விட்டு தெற்கு நோக்கிச் சென்றனர். அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி விக்ரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி செல்ல வேண்டும் என்று நினைத்த அவர்கள், இரவு ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது. அப்போது தாங்கள் கொண்டு வந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர்.

பொழுது விடிந்ததும், பெருமாள் உற்சவ விக்ரகங்களை வைத்திருந்த பெட்டிகளை தூக்க முயன்றனர். ஆனால், அந்தப் பெட்டிகளை அசைக்கக்கூட முடியவில்லை. வேறு வழியில்லாமல், அன்று அங்கேயே தங்கினர். அன்று இரவு, பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள் “நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். நான் உங்களைக் காப்பேன். நாளை காலை பெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று ஒரு புளிய மரத்தில் போட்டு விட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புங்கள்” என்று சொல்லி மறைந்தார்.

மறுநாள் காலையில், வானத்தில் வட்டமிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்ரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினர்.

புளிய மரத்தின் அருகே கோவில் அமைந்ததால். அந்த இடத்தை 'சித்தப் பண்டூர்' என்றார்கள். புளியம்பழத்தை தெலுங்கில் 'சித்தப் பண்டு' என்பர். அதுவே பின்னாளில் 'சிந்துப் பட்டி' என்றானது. மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருப்பதன் காரணமாகவும் சிந்துப்பட்டி என்ற பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

வேண்டுதல்கள்

பொதுவாக பெருமாள் கோவில்களில், கருடக் கொடியுடன், கொடிமர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பது போல்தான் கொடிமரம் இருக்கும். ஆனால் இங்கு கொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாகனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தனை செய்கிறார்கள். இதற்கு 'கம்பம் கழுவுதல்' என்று பெயர்.

கொடிமரத்துக்கு விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து தடவி திருமஞ்சனம் நடைபெறுகிறது. பிறகு, கொடிமரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சாத்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப்பேறு உண்டாகும், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும், தொலைந்துபோன பொருட்கள் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், அங்கு செல்ல முடியாதபட்சத்தில், இங்கு நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்திரன், இங்குள்ள பெருமாளை அங்கப்பிரதட்சணம் செய்து சாப விமோசனம் பெற்றதால், இங்கு வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் பாவங்களை நீங்க பிரார்த்திக்கிறார்கள். விஜயதசமி திருநாளில் புதுமணத் தம்பதியர் இங்கு வந்து, நோன்பு எடுத்து அர்ச்சனை செய்து, பெருமாள், தாயாரை வழிபட்டு செல்கிறார்கள்.

அமைவிடம்

திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில், 18 கி.மீ. தொலைவில் உள்ள சிந்துப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது, வேங்கடேச பெருமாள் கோவில்.

1 More update

Next Story