

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்மச்சாரம்மன், செல்ல விநாயகர், சீனிவாச பெருமாள் ஆகிய ஆலயங்களின் பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்வாக இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேர் சக்கர பூஜையைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினர். இதையடுத்து தேர் வடம் பிடிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். கீழ்மாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது.