

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் மற்றும் பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிலைகள் ஒவ்வொரு விதமான தோற்றத்துடன், சிறந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள சில விநாயகர் சிலைகள் கவனம் பெற்றுள்ளன. குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மீனாட்சி அம்மன் தெருவில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில் பொதுமக்கள் சார்பில் 601 கிலோ லட்டால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சிவசக்தி அம்மன், விநாயகருக்கு அன்னம் ஊட்டும் வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் புதுப்பேட்டை பண்டார முத்தையன் தெரு சின்னா முதலி தெரு சார்பில் 15 அடி உயரத்திற்கு அன்னாசி பழங்களால் ஆன விநாயகர் உருவம் உருவாக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிலைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை கொளத்தூரில் 12 ஆயிரம் வலம்புரி சங்குகள், 2 ஆயிரம் சிப்பிகளால் 40 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மணலி பெரியதோப்பில் 2,000 முகம் பார்க்கும் கண்ணாடிகள், 1,800 குங்கும் சிமிழ்கள் மற்றும் கலசங்களை பயன்படுத்தி, 20 அடி உயரத்திற்கு, விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரூபாய் நோட்டுகளால் உருவான விநாயகர் சிலைகள், நாணயங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், புத்தம்புது சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை, அகல் விளக்குகளால் உருவாக்கப்பட்ட சிலை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.