

விருதுநகர்,
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று அக்னி சட்டி மற்றும் கயிறு குத்து திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு 21 அக்னி சட்டி, 51 அக்னி சட்டி, பிள்ளைத்தொட்டில், கரும்பு தொட்டில், அலகு குத்தி ரதம் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
திருவிழாவின்போது சிறிது நேரம் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை தேர் சுவடு நோக்கி வரும் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் இன்னிசை, வில்லிசை, சொற்பொழிவு, பல்சுவை கதம்ப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.