கோவில்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது ஏன்?

தரையில் விழுந்து தலைவணங்கி இறைவனை வணங்கும்போது, உள்ளத்தில் நினைத்த நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டிக்கொள்ளவேண்டும்.
Sashtanga Namaskaram performed in temples
சாஷ்டாங்க நமஸ்காரம்
Published on: 

கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு தருணமும், நம் உள்ளத்தை சுத்தப்படுத்தும் ஒரு ஆன்மிகப் பயணம். அங்கே செய்யப்படும் ஒவ்வொரு வழிபாடும் ஒரு அர்த்தம் கொண்டது. அந்த வழிபாடுகளில் மிகவும் ஆழமான பொருள் கொண்டது ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’.

சாஷ்டாங்கம் என்றால் என்ன?

“சாஷ்டாங்கம்” என்பது “எட்டு அங்கங்கள்” என்று பொருள். அதாவது, தலை, இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், மார்பு, மனம், ஆன்மா இவை அனைத்தையும் இறைவனின் திருவடியில் சமர்ப்பிப்பதே சாஷ்டாங்க நமஸ்காரம். சாஷ்டாங்கம் என்பது வடமொழிச் சொல் ஆகும். தமிழில் ‘நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்’ என்று குறிப்பிடுகிறோம்.

இது தரையில் விழுந்து வணங்குவது மட்டுமல்ல. “நான் எதுவும் இல்லை… அனைத்தும் நீ தான்!” என்று இறைவனிடம் சரணாகதி அடைந்து முழுமையாக ஒப்படைக்கும் தருணம்.

வாழ்க்கை தத்துவம்

பரந்து விரிந்த வானம், அதில் தோன்றும் வானவில்லின் வருகையையும் மறைவையும் அறியாது. அதைப் போலவே, நம் வாழ்க்கையும் எப்போது தொடங்குகிறது, எப்போது முடிகிறது என்பதை நாம் அறிய முடியாது.

மரத்தில் பழுத்து விழும் கனிகளைப் போல, சிலர் வாழ்வை முழுமையாக அனுபவித்து இறைவனிடம் சேர்கிறார்கள்.

ஆனால் சிலர், பிஞ்சாகவே காற்றில் விழும் காய்களைப் போல, வாழ்க்கையின் நடுப்பாதையிலேயே பிரிந்து விடுகிறார்கள். இந்த நிலையாமையை உணர்த்தும் ஒரு செயல்தான் சாஷ்டாங்க நமஸ்காரம்.

ஏன் தரையில் விழுந்து வணங்குகிறோம்?

நாம் தரையில் விழும்போது, நம் அகங்காரம் உடைகிறது, நம் ஆசைகள் இறைவனிடம் ஒப்படைக்கப்படுகின்றன, நம் மனம் சுத்தமாகிறது.

“இந்த பிறவியிலேயே நாம் நினைத்த நல்லவை அனைத்தும் நிறைவேற வேண்டும்” என்ற ஆழ்ந்த எண்ணத்துடன்தான் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. தரையைத் தொடாத இறைவனின் திருவடிகளை நினைத்து, நாம் தரையைத் தொடுவது, அவரது அருளை முழுமையாக பெற வேண்டும் என்ற பணிவின் வெளிப்பாடு.

தமிழ் மரபின் சான்று

இந்த உயர்ந்த உண்மையை நம் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான நாலடியார் மிக அழகாக விளக்குகிறது:

“வானிடு வில்லின் வரவறி வாய்மையால்

கானிலந் தோயாக் கடவுளை- யாம்நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து

முன்னி யவைமுடிக என்று”

அதாவது, நாம் தரையில் தலைவணங்கி இறைவனை வணங்கும்போது, நம் உள்ளத்தில் நினைத்த நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என வேண்டிக்கொள்வதை இந்த பாடல் உணர்த்துகிறது.

வழிபாட்டின் பொருள்

கோவில் என்பது வெறும் வேண்டுதல்களைச் சொல்லும் இடம் மட்டுமல்ல. அது நம்மை நாமே திருத்திக் கொள்ளும் இடம். ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும்போதும், “நான் என்ன தவறு செய்தேன்?” என்று நம்மை சுய பரிசோதனை செய்து, சிந்திக்க வேண்டும். பிறருக்கு துன்பம் தராமல் வாழ வேண்டும், அன்பும் அறமும் நிறைந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே இறைவன் விரும்பும் உண்மையான வழிபாடு. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மனிதப் பிறவியின் மதிப்பினை உணர்ந்து அறவழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com