

மதுரை,
உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி மதுரைக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். இந்த ஆண்டு 494 மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மதுரை சித்திரை திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழா, மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை விழா என, சைவ-வைணவ மதங்களின் இணைப்பாக இந்த விழா நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான அழகர்கோவில் சித்திரை விழாவின் முன்னோட்ட மாக கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி ஆயிரம் பொன் சப்பர முகூர்த்த விழா மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. அடுத்ததாக வருகிற 17-ந்தேதி கொட்டகை முகூர்த்த விழா நடைபெற உள்ளது. அழகர்கோவில் சித்திரை திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.
29-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அழகர், மதுரைக்கு புறப்பட தங்கப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு இருந்து பக்தர்கள் புடைசூழ வர இருக்கிறார். 30-ந்தேதி அதிகாலையில் மூன்று மாவடியில் அழகருக்கு எதிர்சேவையும், மே 1-ந்தேதி அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரையில் வீற்றிருந்து மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பல லட்சம் பக்தர்கள் அழகரை தரிசனம் செய்கிறார்கள்.
2-ந்தேதி சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும், கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சியும் நடக்கிறது. 3-ந்தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப் பல்லக்கு திருவிழா, 4-ந்தேதி காலையில் கள்ளழகர் அதே பரிவாரங்களுடன் அழகர்மலை நோக்கி புறப்படுகிறார்.
5-ந்தேதி காலை 10.40 மணிக்கு மேல் 11.10 மணிக்குள் கள்ளழகர் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருகிறார். 6-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டில் வரும் வழியில் கள்ளந்தரி, அப்பன் திருப்பதி, தல்லாகுளம், மதுரை வண்டியூர் வரை என 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.