தான தர்மங்களும் பலன்களும்..! கருட புராணம் கூறும் அற்புத தகவல்கள்

மனிதர்கள் தர்மம் செய்வதற்கான பாதை மற்றும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை பற்றிய வழிகாட்டுதலை கருட புராணம் வழங்கி உள்ளது.
தான தர்மங்களும் பலன்களும்..! கருட புராணம் கூறும் அற்புத தகவல்கள்
Published on

புராணங்களில் 18 வகையான புராணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கருடபுராணம். பகவான் மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர் கருடன். மகாவிஷ்ணு சொல்லச் சொல்ல, அதை கருடன் கேட்ட புராணம் ஆதலால் கருட புராணம் என்று அழைக்கப்படுகிறது. பிறப்பு இறப்புகள், மறுபிறவி, பாவ புண்ணியங்கள், சடங்குகள் என மனித வாழ்க்கைக்கு பயனுள்ள பல தகவல்கள் கருட புராணத்தில் உள்ளன.

குறிப்பாக, மனிதர்கள் தர்மம் செய்வதற்கான பாதை மற்றும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை பற்றிய வழிகாட்டுதலை கருட புராணம் வழங்கி உள்ளது. தான தர்மங்கள் மற்றும் நற்செயல்களுக்கான பலன்கள் குறித்து பார்ப்போம்:

* தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவார்கள். அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின்படி சுகித்திருப்பார்கள்.

* கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

* கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

* குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

* தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

* வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

* வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழ்வர்.

* ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

* விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

* குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

* தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

* பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

* நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரிய லோகம் செல்வார்கள்.

* தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்திய லோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

* ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட் காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

* நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

* பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோலோகத்தை அடைவர்.

* தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

* சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

* கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

* பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

* விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்தி தேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com