

பூர்ணிமாவின் போனில் பார்த்த காட்சி அருணை அதிரடித்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
ஏய்..! இது எப்படி..?
பூர்ணிமாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.
தெரியல அருண்..!
அவளிடமிருந்து போனைப் பிடுங்கி, அருண் மீண்டும் அந்த வீடியோ காட்சியை ஓடவிட்டான். இரவு விளக்கின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டு, சுமார் இருபது வினாடிகளுக்கு மட்டுமே ஓடியது அந்தக் காட்சி. பூர்ணிமா குளித்துவிட்டு, மெலிதான அந்த பிங்க் நைட்டியை அணிந்து படுக்கை அறைக்குள் நுழையும் காட்சி அது.
அருண் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். இப்பப் புரியுதா..? பிங்க் நைட்டி பத்தி அவகிட்ட நான் சொன்னதா முத்ரா சொன்னாளே, அது பொய்.. இதைப் பார்த்துட்டுதான் சொல்லியிருக்கா..!
இப்ப என்ன செய்யணும், அருண்..?
முதல்ல இதை யார் அனுப்பியிருக்காங்கனு தெரிஞ்சாதான் போலீஸுக்கு எடுத்துட்டுப் போக முடியும், பூர்ணிமா..!
இதுவரைக்கும் எனக்குப் பழக்கமில்லாத புது நம்பர்லேர்ந்து வந்திருக்கு அருண்..! நம்ம பெட்ரூம்ல ஒளிஞ்சிருந்து யார் இதை எடுத்திருக்க முடியும்..? நெனைச்சாலே பயமா இருக்கு..!
இது மட்டும்தானா..? இன்னும் வேற என்னென்னலாம் வீடியோ எடுத்திருக்காங்கன்னு தெரியலையே.. கொஞ்சம் இரு.. என்று தன்னுடைய போனை எடுத்தான் அருண்.
பூர்ணிமாவுக்கு எந்த எண்ணிலிருந்து அந்த வீடியோ காட்சி வந்திருந்ததோ, அந்த எண்ணை தன் போனில் டயல் செய்தான். இரண்டாவது ஒலியிலேயே, எதிர்முனை எடுக்கப்பட்டது.
சற்றே போதை கலந்த குரல், யாரது..? என்று கரகரப்பாகக் கேட்டது.
நீங்க யாரு..? என்று கேட்டான் அருண்.
ஹலோ, போன் பண்ணது நீங்க..! உங்களை அறிமுகப்படுத்திக்க வேண்டியதுதான் நாகரிகம்..
அருண் பல்லைக் கடித்து பொறுமை காத்தான். என் பேரு அருண்..
சரி.. என்ன மேட்டர்..?
என்னோட மனைவி போனுக்கு உங்க நம்பர்லேர்ந்து ஒரு வீடியோ வந்திருக்கு..
ஓஹோ..ஹோ..! பூர்ணிமாவோட புருஷன்னு முதல்லயே சொல்லியிருக்கலாமே..!
அந்த வீடியோ உங்க கைக்கு எப்படி கிடைச்சுது..?
இது மட்டும் இல்லப்பா.. பெட்ரூம்ல நீயும் உன் மனைவியும் எப்படியெல்லாம் கொஞ்சினீங்கன்னு இன்னும் நூறு வீடியோ இருக்கு..
ஹலோ, நான் சைபர் க்ரைம்ல புகார் குடுக்க முடியும்..
புகார் குடுத்தா, மிச்ச வீடியோலாம் உலகெங்கும் முதன்முறையாகனு சொல்லி, யூ-டியூப்ல பாக்க வேண்டிவரும்..
அவனோடு மல்லுக்கு நின்று, பயனில்லை என்பது அருணுக்குப் புரிந்தது.
உனக்கு என்னய்யா வேணும்..?
உனக்கு மிச்ச வீடியோலாம் வேணுமா பூர்ணிமா புருஷன்..?
ஆமா..
அப்போ, என் ப்ரெண்டைப் போய்ப் பாரு..
யார் உன் ப்ரெண்ட்..?
அன்னிக்கி மாடில வால்வை மூடி என்னை துரத்தினியே, மறந்து போச்சா..?
ஏய்.. நீ.. நீ..
குட் லக் மேன்.. என்று எதிர்முனை வைக்கப்பட்டது.
முத்ரா வீட்டுக்கு வந்த ராஸ்கல்.. அவளைப் போய்ப் பாருன்றான்..
முத்ராவா..? பூர்ணிமாவிடமும் அதிர்ச்சி. நானும் வரேன் அருண்..!
வேணாம்.. ஏற்கனவே உன் மனசு நிம்மதியில்லாம கண்டபடி அலைபாய்ஞ்சிட்டு இருக்கு.. வயித்துல வளர்ற குழந்தைக்கு அது நல்லது இல்ல.. நானே போய்ப் பார்க்கறேன்..
அருண், தடதடவென்று படிகளில் ஏறி, முத்ரா வீட்டு அழைப்புமணியை அழுத்தினான்.
முத்ரா வழக்கம்போல், அரை டிராயர் அணிந்திருந்தாள். கதவைத் திறந்ததும், நட்புடன் புன்னகைத்தாள்.
ஹலோ அருண்..! வாங்க, வாங்க.. எவ்வளவு நாளாச்சு நீங்க என்னைத் தேடிவந்து..!
முத்ரா, என்ன இது..? என்று குரலில் ஆத்திரம் குமுற, பூர்ணிமாவின் போனைக் காட்டினான், அருண்.
ஓ, ரோஷன் ரோஷக்காரன்.. உடனே அனுப்பிட்டானா..?
ஏன் முத்ரா எங்க மேல இவ்வளவு வஞ்சம்..?
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க நல்ல நண்பர்களா இருப்பாங்க. அதுவும் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவ நான். ஆசையா இந்த வீட்டுக்கு குடித்தனம் வந்தவ.. என்னோட நண்பனுக்கு எதிர்ல என்னை அன்னிக்கு ரொம்ப அசிங்கப்படுத்திட்டீங்க..! அவன் கோவக்காரன்..! உங்க ரெண்டு பேரையும் பழிவாங்காம ஓயமாட்டேன்னு கத்தினான். இன்னும் பல வீடியோக்களை காட்டினான். சும்மா முதல் மெரட்டலா அதுல ஒரு சாம்பிள்தான் உங்களுக்கு அனுப்பியிருக்கான்..
போலீஸுக்குப் போனா, உங்க ரெண்டு பேரையும் உள்ள தூக்கி வெச்சிருவாங்க..
என்னையா, உங்களையா..? உங்க மனைவியை ஏமாத்தி, உங்க பெட்ரூம்ல நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருக்கற வீடியோவை ரகசியமா எடுத்து பொதுவுல போட்டு, நீங்க சம்பாதிக்கறீங்கனு முன்தேதி போட்டு, ஒரு புகார் எழுதி, போலீஸ்ல இருக்கற நண்பன் ஒருத்தன்கிட்ட நான் ஏற்கனவே கொடுத்து வெச்சிருக்கேன்.. அவசியம் வந்தா, அதை அவன் பதிவு பண்ணுவான்.. போலீஸ்லயும் எனக்கு ஆள் இருக்கு, அருண்..
அருண் அதிர்ந்து நின்றான். முத்ராவைப் போன்ற பெண்ணுக்கு எந்த மட்டத்தில் வேண்டுமானாலும், தொடர்புகள் இருக்கலாம்.
இன்னொரு பிரச்சினை இருக்கு, அருண். இதுவரைக்கும், பூர்ணிமாவும், நீங்களும் மட்டும்தான் அதைப் பார்த்திருக்கீங்க.. இன்னும் உலகத்துல வேற யாரும் பார்க்கல.. போலீஸ்க்குப் போனா, என் நண்பன் கோபம் வந்து மத்த வீடியோலாமும் ஏத்திடுவான்.. இணையத்துல ஏறிடுச்சுன்னா, சுந்தரம் பார்ப்பாரு.. கல்பனா பார்க்கும். அட, கிராமத்துலேர்ந்து வந்திருக்காங்களே... தம்பி, தம்பின்னு உங்களைக் கொஞ்சிட்டிருக்காங்களே, அந்த தாயம்மா பார்க்கும். பரவாயில்லையா..?
உனக்கு என்னதாண்டீ வேணும்..?
இப்ப கோவமா இருக்கீங்க.. நான் எது சொன்னாலும் உங்களுக்கு மண்டையில ஏறாது. எனக்கும் உங்ககூட சண்டை போடணும்னு ஆசையில்ல.. நாம அப்புறம் சமாதானமா இதுபத்திப் பேசுவோம்.. கவலைப்படாதீங்க.. என்னோட அனுமதியில்லாம எந்த வீடியோவும் இணையத்துல ஏறாது.. நீங்களும் பூர்ணிமாவும் நிம்மதியா கட்டிப் பிடிச்சிட்டு தூங்கலாம்..
ச்சீ..! நீயெல்லாம் ஒரு பொண்ணா..? என்று ஆத்திரத்துடன் கதவை அறைந்து சாத்திவிட்டு அருண் படிகளில் இறங்கினான்.
* * *
அருண் வீட்டுக்குள் நுழைந்த வேகத்தைப் பார்த்ததும், தாயம்மாவுக்கு திகிலாக இருந்தது.
தம்பி, சாப்பிட வரீங்களா..? என்று தயக்கத்துடன் கேட்டாள். ஒரு வேளை சாப்பிடலன்னா, யாரும் செத்துட மாட்டாங்க.. என்று அருணிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, தாயம்மா அப்படியே சுருங்கி சமையலறைக்குள் ஒடுங்கிவிட்டாள்.
அருண், படுக்கையறைக்குள் நுழைந்து, எல்லா விளக்குகளையும் போட்டான்.
இங்கதான் அந்த கேமிராவை ஒளிச்சு வெச்சிருக்கான். எங்கன்னு கண்டுபிடிக்கணும்.. என்று சுற்றிலும் பார்வையை ஓட்டினான். ஓரிடத்தில் அவன் பார்வை சட்டென்று நின்றது. அங்கு, முத்ராவும், கார்த்திக்கும் அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்த ராதா-கிருஷ்ணன் ஓவியம்.
பாய்ந்து அந்த ஓவியத்தை எடுத்தான். அலங்காரமான சட்டத்தில் நான்கு புறமும் கண்ணாடி முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதில் தான் கேமிராவை ஒளித்துவைத்திருக்க வேண்டும். ஓவியத்தைக் கீழே வைத்து, முழங்காலால் அழுத்தி இரண்டாக முறித்து, சட்டங்களை உடைத்தான். அந்த வேகத்தில் கையில் உடைந்த சட்டம் கீறி, ரத்தம் வந்தது. அதைப் பொருட்படுத்தவில்லை.
பூர்ணிமா அவனை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் சந்தேகம் உண்மையாகிவிட்டது. ஒரு கண்ணாடி முத்துக்குப் பின்னே, ஒரு மினி கேமிராவும், அதை இயக்கும் பட்டன் பேட்டரியும் ரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்தன.
முத்ராதான்...! அவதான் திட்டம் போட்டு இதைப் பரிசாக் குடுத்திருக்கா.. நாமளும் முட்டாள் மாதிரி இத்தனை நாளா இதைப் படுக்கை அறையில மாட்டி வெச்சிருக்கோம்.. என்றான் அருண். நல்ல பாம்பை நாமளே குடிவெச்சிட்டு, விஷம் கக்குதே, கக்குதேன்னு கலங்கிட்டிருக்கோம்..
பூர்ணிமா, போர்வையை இழுத்து கழுத்துவரை போர்த்திக்கொண்டாள். கை விரல்கள்கூட வெளியில் தெரியாதபடி, மூடிக்கொண்டு உட்கார்ந்து, அழுதாள்.
ஐயோ, ஏதாவது வீடியோ வெளிலவந்து எங்க உறவுக்காரங்க யாராவது பார்த்தாங்க, அன்னிக்கே நான் தூக்குல தொங்கிருவேன்..
பூர்ணிமா, ப்ளீஸ் அந்த மாதிரி அபத்தமெல்லாம் பேசாதே..! என்று அவளை அவன் அணைத்துக்கொண்டான். அவள் நடுங்கி விலகினாள்.
பூர்ணிமாக்குட்டி, அதான் கேமிராவை எடுத்துட்டேன் இல்ல..? ஏன் பயப்படறே..?
முத்ரா வீட்டைக் காலி பண்ற வரைக்கும் என்னைத் தொடாத, அருண்..
அருண் பொறுமையிழந்தான்.
இரு, இதுக்கு நான் ஒரு முடிவு கட்டறேன்..! என்று பரபரவென்று வெளியேறினான்.
-தொடரும்