

கள்ளக்குறிச்சி,
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி, அதனை விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன்மலையில் உள்ள பொரசம்பட்டு வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் காமராஜ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பொரசம்பட்டு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
4 ஆயிரம் லிட்டர்
அப்போது அங்குள்ள நீரோடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். தொடர்ந்து சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.