அம்ரிதா ரெயிலில் பயணியை தாக்கி போதையில் தகராறு செய்த கும்பல்

அம்ரிதா ரெயிலில் பயணியை தாக்கி போதையில் தகராறு செய்த கும்பல்

மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா ரெயிலில் பயணியை தாக்கி போதையில் தகராறு செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
Published on

மதுரை,

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரத்துக்கு அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில், நேற்று மாலை வழக்கம் போல 4 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சென்றது. இதற்கிடையே, தத்தனேரி வைகை ரெயில்வே பாலத்தில் ரெயில் சென்றபோது, சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அப்போது, அங்கிருந்த சில போதை ஆசாமிகள், ரெயில் பெட்டிக்குள் ஏறி அநாகரிகமாக கத்திக்கொண்டும், கூச்சல் போட்டுக்கொண்டும் சென்றனர். அப்போது, ரெயிலில் பயணம் செய்த ரெயில்வே ஊழியர் ஒருவர் அவர்களை தட்டிக்கேட்டார். உடனே அவரை ரெயில் பெட்டிக்குள்ளேயே அந்த மர்ம கும்பல் தாக்கியது. இதில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு தத்தனேரி செல்லும் பாதையில் இறங்கி ஓடி விட்டனர்.

அப்போது, ரெயிலின் ஏ.சி. பெட்டியில் நின்று கொண்டிருந்த மெக்கானிக் அந்த மர்ம நபர்களை தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். பின்னர், இது குறித்து, மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னுச்சாமி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய மர்மநபர்களை புகைப்படத்தின் மூலம் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com