

அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2-வது கட்டமாக நேற்று தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை பாலவநத்தம் கிராமத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை நேற்று காலை கனிமாழி எம்.பி. தொடங்கினார்.
அப்போது அவர் அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கிராம மக்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டம் போல், நகர மக்களுக்கும் 100 நாள் வேலைய வழங்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருநகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் விவசாய கடன்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் அடிமையாக இருந்து வருகிறது. தமிழக மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது. இதனால் விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதியோருக்கு உதவித் தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை. எந்த அரசு அலுவலகங்களுக்கு சென்றாலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
விவசாய நிலங்களை பறித்து விட்டு, எட்டு வழி சாலை பணிகளை அமைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். அதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். பெண்கள் தனியாக வெளியே நடமாட முடியவில்லை. கொரோனா காலத்தில் வேலை இழந்து தவித்து வரும் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.
அதன் பலனாக தற்போது ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்க முன் வந்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல் வாழ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அருப்புக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளில் நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கனிமொழி கேட்டறிந்ததுடன், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து பந்தல்குடியில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், அருப்புக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் சசிகலா பொன்ராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், பிரமுகர் சீனிவாசப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.