உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?; இதைப் படிங்க தீர்வு கிடைக்கும்!

யோகா பயிற்சியானது உடலுக்கும் மனதுக்கும் விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது.
உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?; இதைப் படிங்க தீர்வு கிடைக்கும்!
Published on

மன அழுத்தம் என்பது இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. இதை கண்டுபிடிப்பது எப்படி?, அதற்கான தீர்வுதான் என்ன? என்பது குறித்து டாக்டர் பவானி பாலகிருஷ்ணன் விளக்கமாக கூறியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும், வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும், வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும்.

உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை உணரும்போது இந்த வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.

நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது. பதற்றமும், அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறையால் பொதுவாக இப்படி நேர்கிறது. சப்தம், கூட்டம், குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகளால் நேர்வது.

அதிக வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் உடலை மிகவும் பாதிக்கும். பணிகளை எப்படிச் சீரமைத்துக்கொள்வது, எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது என்று தெரியாதபோது இந்த வகை மன அழுத்தம் நேரும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மற்றும் மனதளவில் வெளிப்படுகிறது. மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும். மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள் என்றால், பதற்றம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை ஆகியவற்றை கூறலாம்.

உடலளவில் வெளிப்படும் அறிகுறிகள் என்றால், வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது ஆகியவற்றை சொல்லலாம்.

மன அழுத்தத்துக்கான பதில் வினைகளை நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது. இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன.

இவை நம் உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால், அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது, அதிகமாகத் தசைநார்கள் விரைப்படைவது, ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது, ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது போன்ற பல விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.

மன அழுத்தம் ஏற்படுவதால், கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறு, தலைவலி மற்றும் முதுகுவலி, தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வரும்.

தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை அதிகப்படுத்தி, அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. மேலும், மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். ஆஸ்துமா பாதிப்பைத் தீவிரமாக்கும். புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், அளவுக்கதிகமாக உண்ணுதல் போன்ற நடத்தைகளைத் தூண்டிவிடுவதிலும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

யோகாப் பயிற்சிகள் தளர்வு நிலையை அளிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான வழியில் அழுத்தத்தை எதிர்கொள்ளவும் நம் உடலைத் தயார்செய்கிறது.

யோகாப் பயிற்சிகள் நமது தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன் செய்வதால் அழுத்தம் ஏற்படும்போது, நமது உடலும் மனமும் அதை நன்றாக எதிர்கொள்கின்றன.

யோகாப் பயிற்சிகள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைச் சீர்செய்கிறது. பதற்றத்தைக் குறைத்து ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. சுவாசத்தைச் சீர் செய்கிறது.

தவிர, உடலுக்கும் மனதுக்கும் விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்பு நிலையில் இருக்கும்போது, எதிர்ப்படும் எவ்விதச் சூழ்நிலையையும் அமைதியாகவும் பதற்றமில்லாமலும் எதிர்கொள்ள முடியும். இதனால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறையும். உடல் நலம், மன நலம் இரண்டும் மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com