ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்; ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன

ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.
அந்தியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை படத்தில் காணலாம்.
அந்தியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை படத்தில் காணலாம்.
Published on

வேலை நிறுத்தம்

அலோபதி டாக்டர்கள் மேற்கொண்டு வரும் அறுவை சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 8-ந் தேதி டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஆஸ்பத்திரிகள் செயல்படவில்லை. அவசர நோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக நடக்கும் புறநோயாளிகள் பரிசோதனை நடைபெறவில்லை. பல ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் முழுமையாக திறக்கப்படவில்லை.

2 ஆயிரம் டாக்டர்கள்

இதுபற்றி இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை தலைவர் டாக்டர் சக்கரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள அறிவிப்பு மருத்துவ துறையை வலுவிழக்க செய்வதாக உள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகள், அலோபதி மருத்துவத்துறை என்று 2 பிரிவுகளும் தனித்தன்மையை இழப்பதுடன், மருத்துவ சிகிச்சைக்கான நம்பிக்கை இழப்பும் ஏற்படும். பொதுமக்கள் இந்த முறையால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு இருக்கிறோம். ஈரோடு இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் 1,100 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். சுமார் 500 ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் மூடப்பட்டன. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் டாக்டர்கள், சுமார் 1,000 ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டன.

இவ்வாறு டாக்டர் சக்கரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் கூறினார்.

நேற்று ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வந்த நோயாளிகள் சிரமப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வந்து இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் யாரும் வராதது சிரமத்தை ஏற்படுத்தியது. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல ஆஸ்பத்திரிகள் செயல்பட தொடங்கின.

கோபி

இதேபோல் கோபி பகுதியில் டாக்டர்கள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 50 தனியார் ஆஸ்பத்திரிகள், 82 கிளினிக்குகள் மூடப்பட்டிருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தில் கோபி பகுதியில் 220 டாக்டர்கள் பங்கேற்றனர். இதன்காரணமாக தனியார் ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

அந்தியூர்

அந்தியூர் பகுதியிலும் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளிகள் பிரிவு இயங்கவில்லை. அதே நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கின.

இதையொட்டி இந்திய மருத்துவ சங்க அந்தியூர் கிளை சார்பில் அந்தியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளை தலைவர் டாக்டர் ஞானவேல் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் பாபு ரமேஷ் பிரபு, பொருளாளர் டாக்டர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது டாக்டர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு நின்றபடி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com