

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு அடிவார பகுதியில் குடகனாறு தொடங்குகிறது. அங்கிருந்து ஆறு ஆத்தூர், திண்டுக்கல் வழியாக வேடசந்தூர் செல்கிறது. பின்னர் இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வழியாக தன்னுடைய 109 கிலோ மீட்டர் பயணத்தை முடித்து, மூலப்பட்டி என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் கலக்கிறது.
சிறுமலையில் உருவாகும் சந்தானவர்த்தினி ஆறு மற்றும் மாங்கரையாறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகளும் குடகனாற்று நீர்வரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் அந்த பகுதியில் வறட்சியை போக்க குடகனாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் கடந்த 1973ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியால் 5 ஷட்டர்கள் கொண்ட புதிய அணை கட்டப்பட்டது.
அணை கட்டப்பட்டு திறக்கப்படாத நிலையில், 1977ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தில் அணை உடைந்தது. இதன் பின்னர் ரூ.10 கோடியே 20 லட்சம் செலவில் பழைய 5 ஷட்டர்கள் பழுதுபார்க்கப்பட்டது. மேலும், கூடுதலாக 10 ஷட்டர்களுடன் புதிய அணை கட்டப்பட்டது. இதனை 1994ம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார். அதன்படி அணையில் மொத்தம் 15 ஷட்டர்கள் உள்ளன.
அணை கட்டிய பின்பு முதன்முதலாக கடந்த 2005ம் ஆண்டு நிரம்பியது. இந்த அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதிபெறுகின்றன. இதில் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வார்பட்டி, பாலப்பட்டி, கூம்பூர், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், கரூர் மாவட்டத்தில் பெரிய மஞ்சுவளி, ஈசநத்தம், அம்மாபட்டி ஆகிய கிராம விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பெய்த கனமழையினால் டிசம்பர் மாதம் 21ம் தேதி அணையில் மொத்த உயரமான 27 அடியில் 25 அடி வரை தண்ணீர் நிரம்பியது. மேலும், அதிகமான மழை வெள்ளம் வந்ததால் அணையில் இருந்த பழைய ஷட்டர்களில் முதலாவது ஷட்டர் உடைந்தது. இந்த ஷட்டர் 200 அடி தூரத்திற்கு அடித்துச்செல்லப்பட்டது.
இதன்காரணமாக அணையில் தேங்கியிருந்த 25 அடி நீரும் வீணாக வெளியேறியது. இதனையடுத்து அணையில் உள்ள 5 பழைய ஷட்டர்களை முழுவதும் மாற்றவேண்டும் என்று விவசாயிகள் கோரிககை விடுத்தனர். அதன்பேரில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் ஒதுககீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஷட்டர்களுககுள் நீர்வராமல் தடுக்க அணையின் உட்பகுதியில் ஷட்டர்களுககு முன்பு 10 அடி உயரமுள்ள கரை அமைககப்பட்டது.
2012ம் ஆண்டு 18 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக நீர் தேக்கி வைக்கப்பட்டது. அணை திறக்கப்படவில்லை.
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணையில் 20 அடிக்கு மேல் நீர் தேக்கப்பட்டது. ஆனால் ஷட்டர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் நீர் கசிவு ஏற்பட்டது. அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையால் 2014ம் ஆண்டும் அணையில் முழுமையாக தண்ணீர் தேக்க முடியவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் மழைக்காலங்களில் அணைக்கு அதிகப்படியான வெள்ளநீர் வந்தால் தானாக நீர் வெளியேறும் வகையில் அணையின் மேற்குப்பகுதியில் 250 மீட்டர் நீளமுள்ள கரைகள் அகற்றப்பட்டன. மேலும் அதிகப்படியான வெள்ளநீர் வெளியேறும்போது அணைப்பகுதியில் உள்ள மற்றொரு கரை பாதிக்காத வகையில் 1 முதல் 3 அடி வரை தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.
இந்த திட்டத்தினால் அணைக்கு அதிகளவு வெள்ளநீர் வந்தால் தானாக வெளியேறும் நீர் அணையின் முன்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று கிராம மக்களும், விவசாயிகளும் அச்சத்தோடு உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அணையில் 25 அடி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டது. அதன்பிறகு விவசாய பாசனத்திற்காக வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்தநிலையில், 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் அணையில் உள்ள வாய்க்கால் இரு மதகுகளின் ஷட்டர்களை மாற்றுவதற்கும், 5 பழைய ஷட்டர்களை பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அணையில் இருந்த 9 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான மழை பெய்யாததால் அணை வறண்டது.
குடகனாறு தொடங்கும் இடம் முதல் முடிவு வரை ஆற்றின் இரு பகுதியிலும் சீமைக்கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி குடகனாற்றின் ஓரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்ற பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குடகனாறு அணை கட்டப்பட்டு 44 ஆண்டுகள் ஆன நிலையில் அணையின் உட்பகுதியில் வண்டல்மண் அதிகளவு படிந்து உள்ளது. சுமார் 3 அடி அளவுக்கு வண்டல் மண் படிந்துள்ளதால் தண்ணீர் தேக்கும் அளவு குறைந்துள்ளது. தற்போது அணை வறண்டு உள்ளதால் தூர்வாருவதற்கு இதுவே நல்ல வாய்ப்பாகும்.
மேலும் புதிய ஷட்டர்கள் அமைத்து முறையாக பராமரித்தால் ஆண்டு முழுவதும் தேவையான தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதன்மூலம் அணையை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணை நீரை வேடசந்தூர் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தலாம். எனவே அணையை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தால் காணாமல் போன கிராமம்
1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அணை ஓரத்தில் இருந்த கைத்தியன்கோட்டை கிராமத்தையே வெள்ளநீர் அடித்துச்சென்றது. வெள்ளம் வருவதை முன்கூட்டியே அறிந்த கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி பக்கத்து கிராமங்களுக்கு குடியேறிவிட்டனர். ஆனால் இன்றும் வருவாய்த்துறை ஆவணங்களில் கைத்தியன்கோட்டை கிராமம் உள்ளது. அதன்படி கைத்தியன்கோட்டை வருவாய் கிராமத்தின் கீழ் விருதலைப்பட்டி ஊராட்சி மற்றும் உட்கடை கிராமங்கள் உள்ளன. இல்லாத ஊரின் பெயர் ஒரு வருவாய் கிராமத்துக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கழிவுநீரால் மாசு
காலமாற்றத்தினால் குடகனாற்றின் ஓரங்களில் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை கழிவுநீர், வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூல்மில் மற்றும் சோப்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், ஓட்டல், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் நேராக குடகனாற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது. இதன்காரணமாக ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் கூட கருகி உள்ளது. தண்ணீரும் மாசு அடைந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே கிராம மக்கள் கட்டிய கல்லணை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பே, குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நீர்மட்டம் உயரும், எதிர்காலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று அந்த பகுதி மக்கள் கருதினர். அதன்படி வேடசந்தூர் அருகே பூதிப்புரம் ஊராட்சி குரும்பபட்டி அருகே குடகனாற்றின் குறுக்கே கல்லணை கட்ட கிராம மக்கள் திட்டமிட்டனர். இதற்காக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரக்கட்டையால் தரைமட்ட வண்டி செய்து அதில் மரக்கட்டை சக்கரம் பொறுத்தப்பட்டது. அந்த வண்டியில் 10 டன் எடையுள்ள கற்களை புரட்டிவைத்து எருமைமாடுகளை பூட்டி கற்களை எடுத்துச்சென்று தடுப்பணை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
இந்த தடுப்பணை முழுக்க முழுக்க கற்களால் அமைந்துள்ளது. இந்த அணையை பார்த்தால் பழங்கால நினைவுகள் வருகிறது. கடந்த 1977ம் ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேடசந்தூரில் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்தன. அப்போது அழகாபுரி குடகனாறு அணை உடைந்தது. ஆனால் வேடசந்தூரை அடுத்துள்ள குரும்பபட்டி தடுப்பணைக்கு மட்டும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க அணை போதிய பராமரிப்பு இல்லாததால் கற்கள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
மேலும் மழைக்காலங்களில் வெள்ளநீர் மிகுதியாக தேங்கும்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தடுப்பணையால் வே.புதுக்கோட்டை, வே.பூதிப்புரம், தட்டாரபட்டி ஆகிய ஊராட்சிகளை சுற்றி பல ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் என்பது குறிப்பிடத்த க்கதாகும். குரும்பபட்டி தடுப்பணையை உயர்த்தி கட்டி சீரமைத்து இரு பக்கமும் வாய்க்கால் அமைத்து அதன் மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தலாம். சிதைந்து கிடக்கும் பழங்கால தடுப்பணையை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.