எருதுவிடும் விழாவின் போது இருதரப்பினர் மோதல்; சாலை மறியல் போலீஸ் தடியடி-பரபரப்பு

அஞ்செட்டி அருகே எருதுவிடும் விழாவின் போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எருதுவிடும் விழாவின் போது இருதரப்பினர் மோதல்; சாலை மறியல் போலீஸ் தடியடி-பரபரப்பு
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ளது பைல்காடு கிராமம். இந்த கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சித்தாண்டபுரம், மாவனட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் சித்தாண்டபுரத்தை சேர்ந்த வேலு (வயது 23) என்பவருக்கும், மாவனட்டியை சேர்ந்த விஜயகுமார் (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று எருதுவிடும் விழாவின் போது மாடு முட்டியதில் வேலுவுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இவருக்கு அடிபட்டதை அறிந்த அந்த கிராம மக்கள் சிலர் வேலுவை மாடு முட்டவில்லை எனவும், விஜயகுமார் மற்றும் சிலர் தாக்கி இருப்பதாகவும் கூறினர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வேலு தரப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த தடியடியில் சிலர் லேசான காயம் அடைந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளதால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com