

நெல்லை:
இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் 34 டன் காய்கறிகள் விற்பனையானது.
உழவர் சந்தை
தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை அவர்களே சந்தைப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
இந்த உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தனித்தனியாக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அந்த காய்கறிகளுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இன்றைய காய்கறி மார்க்கெட் நிலவரத்தின் படி விலை நிர்ணயம் செய்வார். நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும். இதனால் விவசாயிகளுக்கும், காய்கறி வாங்க வரும் நுகர்வோரும் பயன் அடைந்தனர்.
தக்காளி ரூ.28-க்கு விற்பனை
பாளையங்கோட்டை மகாராஜநகரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்த உழவர் சந்தையில் நேற்று காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடந்தது. இதில் 118 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
இங்கு நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.28-க்கும், கத்தரிக்காய் ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெண்டைக்காய் ரூ.20-க்கும், புடலங்காய் ரூ.16-க்கும், சுரைக்காய் ரூ.12-க்கும், பூசணிக்காய் ரூ.34-க்கும், தடியங்காய் ரூ.20-க்கும், கொத்தவரை ரூ.36-க்கும், பச்சை மிளகாய் ரூ.60-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும், பரியவெங்காயம் ரூ.38-க்கும், சின்னவெங்காயம் ரூ.64-க்கும், தேங்காய் ரூ.38-க்கும், மாங்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
34 டன் விற்பனை
இந்த உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 315 பேர் காற்கறிகள் வாங்கிச் சென்றுள்ளனர். மொத்தம் 34 டன் காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளது. அதாவது ரூ.10 லட்சம் அளவில் விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உழவர் சந்தைக்கு வந்தவர்கள் முககவசம் அணிந்து சமூகவெளியை கடைபிடித்தனர்.