

விழுப்புரம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2 நாட்கள் நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் தொடங்கினர். போராட்டத்தில் முதல் நாளான நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது. குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயங்கின. இதனால் விழுப்புரம் 1, 2, 3-வது பணிமனைகள், செஞ்சி, திண்டிவனம் ஆகிய போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களில் மொத்தமுள்ள 3,042 பஸ்களில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.
பொது போக்குவரத்தை நம்பி இருந்த நகர்ப்புறம் தொடங்கி கிராமப்புற மக்கள் வரை அனைவரும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தனியார் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டது. இதிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த வேலை நிறுத்தத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின.
தொழிற்சங்கங்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.