மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி பேச்சு

கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் தொந்தரவு இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

பெரம்பலூர்:

பிரசாரம்

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அரியலூர் பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. அரசை குறை சொல்லி பேசி வருகிறார். நான் ஊர்ந்து வந்து முதல்-அமைச்சர் ஆனேன் என்று கூறி வருகிறார். நானென்ன பாம்பா, பல்லியா?. நான் நடந்து வந்து முதல்-அமைச்சர் ஆனேன். அதுவும் மக்களின் ஆதரவால் முதல்-அமைச்சர் ஆனேன். வாரிசு அரசியலை நடத்தி வருபவர் ஸ்டாலின். அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று குறை கூறுகிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளின் அடிப்படையில் தி.மு.க. கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு தனது வாரிசான உதயநிதி ஸ்டாலினை எந்த பிரச்சினையும் இன்றி தலைவராக்க, ஸ்டாலின் தான் தனது மகனுக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

மனுக்களுக்கு வேலையில்லை

ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி பெட்டியில் பூட்டி வைத்து வருகிறார். ஆனால் எங்கள் அரசு நவீனமாகி வருகிறது. முதல்-அமைச்சர் குறை தீர்க்கும் பிரிவு என்று நவீனமாக செல்போனில் அழைத்தவுடன் குறைகளை தீர்க்கும் அரசாக உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு இனிமேல் மனுக்களுக்கு வேலையில்லை என்ற நிலைமையே அரசால் உருவாகியுள்ளது.

அதிகார போதையில் ஒரு முதல்-அமைச்சருக்கு கூட மரியாதை கொடுக்காமல் அநாகரிகமாக பேசிவருகிறார் ஸ்டாலின். அ.தி.மு.க. அரசு சொன்னதை செய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்திற்கு இவ்வளவு என்றால் ஒரு மாநிலத்தில் எவ்வளவு கோடிக்கு நலத்திட்டங்கள் செய்துள்ளோம் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. எனவே கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் தொந்தரவு இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்த அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயங்கொண்டம்

முன்னதாக அவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேசுகையில், தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். உடல்நலத்தை பொருட்படுத்தாமல் கூட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் சிறப்பான ஆட்சியை அ.தி.மு.க. தலைமையிலான அரசு செய்து வருகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போராடி 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறார். ஆக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி களத்தில் நிற்கிறது.

வேளாண்மைத்துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்தது. வீட்டிற்கு சென்றவுடன் சட்டையை கழற்றி விட்டால் நானும் விவசாயிதான். அதனால் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கு தெரியும். ஆனால் ஸ்டாலின் அப்படி இல்லை. ஸ்டாலினை போன்று ஹீரோ வேஷம் போட எனக்கு தெரியாது. எங்கு பார்த்தாலும் பொய் பேசுவதை, என்மீது பொய்யான குற்றம் சுமத்துவதை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்திருக்கிறார். எந்த காலத்திலும் அவர் முதல்-அமைச்சராக முடியாது. அவரது தந்தை கருணாநிதியே அவரை நம்பவில்லை என்றால், மக்களா நம்பப்போகிறார்கள்.

கடன் தள்ளுபடி

தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எண்ணற்ற நல்ல திட்டங்களை சொன்னது போன்று செய்தோம். வேறு எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று செய்திருக்கிறார்களா?. கல்வித்துறைக்கு என்று பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தடையில்லா மின்சாரம் பெற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். குடிமராமத்து திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் உள்ள 6 ஆயிரம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு இன்றைக்கு நீர்நிலைகள் உயர்ந்திருக்கின்றன.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போன்று ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். வீடு தேடி ரேஷன் பொருள் வந்து சேரும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். ஜெயங்கொண்டம் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. கைத்தறி மற்றும் விசைத்தறி கூலி நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி மற்றும் 750 யூனிட்டில் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும், என்றார்.

பெரம்பலூர்

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் அவர் பேசுகையில், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். இங்கு கூடியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து பார்த்தால் நமது வெற்றி தெரிகிறது. இது தேர்தல் பிரசார கூட்டம் அல்ல. தேர்தல் வெற்றிவிழாக்கூட்டம். தி.மு.க. ஆட்சியின்போது ஊழல்கள் செய்த 13 அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வாய்தா வாங்கி வருகின்றனர். அவர்கள் செய்த ஊழலை மறைக்க நம் மீது ஊழல் புகார்களை கூறுகின்றனர். தி.மு.க. எப்போது உதயமானதோ அப்போதே ஊழல் பிறந்துவிட்டது. இங்குள்ள முன்னாள் மத்திய மந்திரி தான் அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் செய்தார்.

மக்களிடம் எடுபடாது

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆத்மாக்களின் ஆசிகளால் ஆட்சி நடத்தி வரும் எங்களுக்கு மடியில் கனமில்லை, ஆகவே வழியில் பயமில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் தி.மு.க. குடும்ப அரசியலே ஆதிக்கம் செலுத்துகிறது. அ.தி.மு.க. கடைமட்ட தொண்டர்களால் நடத்தப்படும் அரசியல் கட்சியாகும். விஞ்ஞான உலகில் தமிழக மக்கள் சிந்திப்பில் திறமை மிக்கவர்களாக உள்ளனர். மக்களிடம் தந்திரமாக பேசி, வாக்காளர்களை குழப்பி மு.க.ஸ்டாலின் பொய்களை கூறி வாக்கு அரசியல் செய்வது மக்களிடம் எடுபடாது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இன்றி வனவாசத்தில் இருந்துள்ளதால் தி.மு.க.வினர் கோரப்பசியுடன் இருக்கிறார்கள். மக்களிடம் மனுக்களை வாங்கி, ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று ஏமாற்றுகிறார்கள். அதற்கு மக்கள் முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. வியாபாரிகள் ஒழுங்காக வியாபாரம் செய்ய முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதி, மத அரசியலுக்கு இடமில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அதிவேக இணையதள சேவை வழங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 10 நாட்களில் நிறைவடையும், என்றார்.

குன்னம்

முன்னதாக முதல்-அமைச்சர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிறுத்தத்தில் பேசுகையில், பா.ஜ.க.விற்கு அடிமை வேலை செய்கிறோம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். அது தவறு. மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை எளிதில் நிறைவேற்ற முடியும். நாங்கள் மக்களுக்கு மட்டுமே அடிமையாக இருக்கிறோம்.

ஊழல் என்ற வார்த்தையை அ.தி.மு.க. ஆட்சியைப் பார்த்து பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. ஊழல் குறித்து குன்னம் பகுதியிலேயே மேடை போட்டு விவாதம் செய்ய நான் தயார். மு.க.ஸ்டாலின் தயாரா?. நான் உங்களைப் போல் ஒரு விவசாயி. இன்றும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். முதல்-அமைச்சராகும் ராசி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. அவர் எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்குமான ஓய்வூதியம் உயர்த்தப்படும், என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com