

சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு துறைகளில் உள்ள 170 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31-ந் தேதி வெளியிடப்பட்டது. நேர்முகத் தேர்வு அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, உதவி மேலாளர், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர், உதவி செயலாளர், ஆங்கில செய்தியாளர், தமிழ் செய்தியாளர், கணக்கு அலுவலர், துணை மேலாளர், ஆராய்ச்சி உதவியாளர், மூத்த பூச்சியியல் வல்லுநர், மாவட்ட நூலக அலுவலர், மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்), நகர மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
பி.இ., அல்லது பி.டெக்., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவப் பட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., முதுகலை கால்நடை மருத்துவம், நூலக அறிவியல் அல்லது நூலகம் மற்றும் தகவல் அறிவியல் முதுகலை பட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வணிக பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களும் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று (அக்டோபர் 6) ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி https://tnpsc.gov.in/home.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.