என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி.. கலந்தாய்வு எப்போது?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி.. கலந்தாய்வு எப்போது?
Published on

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருந்தாலும், அதில் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான போட்டியில் 2.44 லட்சம் இருக்கின்றனர். அவர்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்யலாம்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 1,45,043, 1,69,083, 1,87,847, 2,09,653 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பார்கள். இந்த ஆண்டு அதுபோல் இல்லை. அதாவது, அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்களுக்கு, 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் எனவும், ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதவிர, பி.ஆர்க் படிப்புக்கான நாடா நுழைவுத்தேர்வு ஜூன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் பி.ஆர்க் படிப்புக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் (2025-26) 7 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com