

கோவை,
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 3-ந் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு வேளாண்மை படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு 9-ந் தேதி தொடங்கியது. இதேபோல் அரசுப் பள்ளிகளில் படித்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் சேர்க்கை ஆணை வழங்கும் பணி கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்றது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமுள்ள 424 இடங்களில் தற்போது வரை 202 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதி 222 இடங்கள் காலியாக உள்ளன. பொது கலந்தாய்வில் மொத்தம் உள்ள 5,236 இடங்களில் 4,124 இடங்கள் நிரம்பின. 1,112 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு மாணவ-மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் குறிப்பிட்ட தேதிகளில் மாணவ- மாணவிகள் தகுந்த சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.