25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்

ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப்பாலினத்தவர், தூய்மை பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Published on

சென்னை,

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை சேருகிறார்கள்.

இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்காத காரணத்தினால், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்திருந்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கியதைத் தொடர்ந்து, நடப்பாண்டில் தாமதமாக மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கின.

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 717 பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர 81 ஆயிரத்து 927 மாணவர்களும், முதலாம் வகுப்பில் சேர 89 மாணவர்களும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒதுக்கீட்டைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும். ஒதுக்கீட்டைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாணவர் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படும்.

மாணவர் சேர்க்கை செயல்முறை மாநில அரசின் ஆர்.டி.இ. தளத்தின் மூலம் அவரவர் படிக்கும் பள்ளிகளில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் இதனை மேற்பார்வையிடுவார்கள்.

ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப்பாலினத்தவர், தூய்மை பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர் சேர்க்கை செயல்முறை மாநிலம் முழுவதும் வெளிப்படையாகவும், சமத்துவமானதாகவும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com