கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்

தேர்வுக்கு விண்ணப்பிக்க இனி கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்
Published on

சென்னை,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டு கியூட் இளநிலை(யு.ஜி) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த பிப்ரவரி 4-ந்தேதி நிறைவடைந்தது. இதனிடையே, தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, 23-ந்தேதி(இன்று) முதல் வரும்26-ந்தேதி கியூட் இளநிலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க இனி கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு திருத்தம் செய்வதற்கான சந்தர்ப்பம் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com