

சென்னை,
2026-2027-ம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டப் படிப்புக்கு முதல் இறுதி கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
2026-2027-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 579 அரசு மற்றும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் மற்றும் 460 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான புதிய விண்ணப்பப் படிவங்கள் இணையவழியில் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பி.என்.ஒய். எஸ். பட்டபடிப்புக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஏற்கனவே பி.என்.ஒய்.எஸ். பட்டபடிப்புக்கு விண்ணப்பித்து முதல் மூன்று கட்ட கலந்தாய்விலும் இடம் கிடைக்காதவர்கள், முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தும் சேராதவர்கள், மூன்றாம் கட்ட கலந்தாய்வு துவங்கும் முன் இடைநிறுத்தம் செய்தவர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
இறுதி கட்ட காலியிடங்களுக்கான கலந்தாய்விற்கு விருப்ப தேர்வுகளை நிரப்ப தகுதியில்லாதவர்கள்:-
அரசு மற்றும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் மூன்று கலந்தாய்வுகளில் இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்து இந்த கலந்தாய்வு வரை படிப்பை தொடர்பவர்கள்.
மூன்றாம் கட்ட கலந்தாய்வு துவங்கிய பின்பு இடைநிறுத்தம் செய்தவர்கள் (அரசு; அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்). மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இட ஒதுக்கீடு கிடைத்தவர்கள் (அரசு; அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்).
விண்ணப்பிக்கும்முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாக படித்து சரியான தகவல்களை பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் பி.டி.எப்/ஜே.பி.இ.ஜி வடிவில் பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம். கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
அறிவிக்கை நாள் 04.11.2026
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 04.11.2026
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 10.11.2026 மாலை 5.00 மணி வரை
பி.என்.ஒய்.எஸ். பட்டப்படிப்பு கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினை பார்க்கவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.