

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடைமருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் இருக்கின்றன.
இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 15 சதவீதம் ஒதுக்கப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இதற்கான விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.